by admin on | 2025-10-15 09:13 AM
தீபாவளி இனாம்
'வசூல் வேட்டை' லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்தநிலையில் அரசு துறையில் பணியாற்றும் சில உயர் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் நிலையில் உள்ள அலுவலர், ஊழியர்கள், புரோக்கர்கள் அல்லது நேரிலோ வர்த்தக நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்களிடம் "தீபாவளி இனாம்" என்ற பெயரில் 'வசூல் வேட்டையில்' ஈடுபட்டு வருவதாகவும், இனாம் தர மறுப்பவர்களை மிரட்டுவதாகும். சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை இயக்குனர், அலுவலகத்திற்கு புகார்கள் சென்றது. இதில் குறிப்பாக வட்டார போக்குவரத்து அலுவலகம், வருவாய், பொதுப்பணி, நெடுஞ்சாலை, காவல், கலால், தீயணைப்பு ஆகிய துறைகள் மீது ஏராளமான புகார்கள் சென்றுள்ளது. இதனையடுத்து தீபாவளி இனாம் வசூல் வேட்டையில் ஈடுபடுவோரின் பட்டியலை, தயாரித்து கண்காணிக்குமாறு சென்னை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அந்தந்த மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு கடந்த வாரம் உத்தரவிடப்பட்டது. அதன்படி மாவட்டந்தோறும் தீபாவளி வசூல் வேட்டையில் ஈடுபடும் நபர்களின் பெயர், பதவி உள்ளிட்ட விவரங்களை தயார் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு ஊழியர்கள், தீபாவளி இனாம் என்ற பெயரில் பணம் அல்லது பொருளோ வாங்குவது, சட்டப்படி குற்றம். இதனை தடுக்கும் வகையில் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கடந்த 4 நாட்களில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தீபாவளி இனம் என்ற பெயரில் பணம் வசூல் செய்த 3 பேர் பணம் வாங்கும் போது பிடிபட்டு, கைது செய்யப்பட்டனர். 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.10 லட்சம் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தவறு செய்தவர் மீது பாரபட்சம் இன்றி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
ஆர்.சௌந்தர்
மூத்த பத்திரிகையாளர்