by Vignesh Perumal on | 2025-10-14 08:43 PM
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத ரூ.1,12,220 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
வத்தலகுண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், ஆய்வாளர் இளங்கோவன் வாகனங்களுக்கான பர்மிட் வழங்குதல், லைசென்ஸ் வழங்குதல், பதிவு எண் வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளுக்கு புரோக்கர்கள் (தரகர்கள்) மூலம் லஞ்சம் பெற்று வருவதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த ரகசிய தகவலின் அடிப்படையில், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) நாகராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் வத்தலகுண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே இயங்கி வந்த வாகனப் புகை பரிசோதனை மையத்தில் உச்சப்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜ் (34) மற்றும் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த அஜய்ஜான்சன் (25) ஆகிய இரு புரோக்கர்களை வைத்து ஆய்வாளர் இளங்கோவன் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த சோதனையின் முடிவில், கணக்கில் வராத ரூ.1,12,220 ரொக்கப் பணம் மற்றும் சில முக்கிய அரசு ஆவணங்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைப்பற்றப்பட்டன.
பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோவனிடம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் சட்ட ரீதியான அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் குழு.....