by admin on | 2025-10-12 05:22 AM
சிவலிங்காபுரம் கிராமசபையில் மக்கள் வெடிப்பு – “கிழக்கு பகுதி புறக்கணிக்கப்படுகிறதா?” கடுமையான குற்றச்சாட்டு.
இராஜபாளையம் யூனியனின் சிவலிங்காபுரம் கிராமத்தில் இன்று நடைபெற்ற கிராமசபை கூட்டம் மக்கள் கோபத்தால் கொந்தளித்தது. பல்வேறு பிரச்சனைகள் குறித்து மக்கள் வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியதால், கூட்டம் ஒரு கட்டத்தில் பதற்றமான சூழ்நிலையாக மாறியது.மக்கள் தெரிவித்ததாவது: “சிவலிங்காபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் ஆண்டுதோறும் துன்பத்துடன் வாழ்கின்றனர். சல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய்கள் பொருத்தப்பட்டாலும், அதில் வரும் தண்ணீர் மிகவும் அசுத்தமாக உள்ளது. நீர்த்தேக்கங்கள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் குடிநீரில் புழுக்கள் மற்றும் துர்நாற்றம் வருகிறது. இது மக்கள் உடல்நலத்துக்கு ஆபத்து ஏற்படுத்துகிறது,” என்று கடும் அதிருப்தி தெரிவித்தனர்.அதேபோல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி தொகை குறைவாக இருப்பதாகவும், பலமுறை கோரிக்கை வைத்தும் சம்பள உயர்வு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் வலியுறுத்தினர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி அவர்கள் கூட்டத்தில் பேசியபோது, “ராஜபாளையம் யூனியனின் கிழக்குப் பகுதியில் உள்ள ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது மிக குறைவு. ஆனால் மேற்குப் பகுதி ஊராட்சிகளுக்கு பெரும் நிதி வழங்கப்படுகிறது. இது வெளிப்படையான பாகுபாடு. திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் அவர்களின் ஒப்புதலுடனே இவ்வாறு நடக்கிறது,” எனக் கடுமையாக விமர்சித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “வட்டார வளர்ச்சி அலுவலர் கிழக்கு பகுதியை வந்து நேரில் ஆய்வு செய்து, மக்களின் உண்மையான நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். அடிப்படை வசதிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் சமநிலை பின்பற்றப்பட வேண்டும்,” என்றார்.கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் பலரும் “அரசு எங்களை முற்றிலும் புறக்கணித்து வருகிறது; அடிப்படை வசதிகளை உறுதி செய்யும் வரை போராட்டம் நடத்த வேண்டிய நிலை வந்துவிட்டது” எனக் கடும் கோபம் வெளியிட்டனர்.சிவலிங்காபுரம் கிராம மக்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக எடுத்துக்கொண்டு, குடிநீர் தரம், சாலைகள், வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் எனக் கோரப்படுகிறது
எடிட்டர் 9842337244