by Vignesh Perumal on | 2025-10-07 01:44 PM
திண்டுக்கல் - திருச்சி சாலையில் முள்ளிப்பாடி அருகே அரசுப் பேருந்தில் விழுந்து அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் குறித்து, விபத்தா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் காரைக்குடியைச் சேர்ந்த கௌதம் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று இரவு, திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள முள்ளிப்பாடி அருகே சாலையின் ஓரத்தில் சிலர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, அந்த வழியாக திண்டுக்கல்லை நோக்கி வந்த அரசுப் பேருந்து மீது அந்த இளைஞர்களில் ஒருவர் எதிர்பாராதவிதமாகவோ அல்லது தள்ளப்பட்டோ விழுந்து படுகாயமடைந்தார். மற்ற நபர்கள் உடனடியாக ஒரு காரில் ஏறி தப்பி ஓடிவிட்டனர்.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார், காயமடைந்த இளைஞரை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த நபர் காரைக்குடியைச் சேர்ந்த கௌதம் (25) என்பது தெரியவந்துள்ளது.
இவருக்கு எரியோடு அருகே உள்ள பண்ணைப்பட்டியில் திருமணம் ஆகியுள்ளது. சம்பவம் நடப்பதற்கு முன்பு இவர், கோயம்புத்தூர் செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தற்செயலான விபத்தா? அல்லது தகராறின்போது யாரேனும் அவரை பேருந்தின் மீது தள்ளிவிட்டு கொன்றார்களா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, தப்பியோடியவர்களைத் தேடி வருகின்றனர்.
ஆசிரியர்கள் குழு.....