by Vignesh Perumal on | 2025-10-04 10:35 AM
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பெய்த கனமழை காரணமாக, அரசு மருத்துவமனை வளாகத்தை வெள்ளநீர் சூழ்ந்தது. மருத்துவமனைக்குள் மழைநீர் தேங்கியதால் நோயாளிகளும், அவர்களுடன் வந்தவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளானதால், அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கியது. இதனால், நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் தண்ணீருக்குள் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால், சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டது.
மழைக்காலம் தொடங்கும்போதே அரசு மருத்துவமனையின் நிலைமை இவ்வாறு இருப்பது குறித்துப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் இதே நிலை ஏற்படுவதால், வருடாந்திரப் பொதுப் பணிகள் மற்றும் வடிகால் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் முறையாகவும், நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையிலும் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருங்காலத்தில் இதுபோன்ற சிரமங்கள் ஏற்படாமல் இருக்க, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆசிரியர்கள் குழு.....