by Vignesh Perumal on | 2025-10-04 10:11 AM
வடகிழக்குப் பருவமழைக் காலத்தை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் 3 லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் மின் வாரியத்திற்குச் சொந்தமான குடோனில் இன்று (அக்டோபர் 4, 2025) ஆய்வு மேற்கொண்ட ராதாகிருஷ்ணன், வடகிழக்குப் பருவமழையைச் சமாளிப்பதற்கான மின் வாரியத்தின் தயார்நிலைகள் குறித்து விளக்கினார்.
மழைக் காலத்தில் ஏற்படும் சேதங்களைச் சரிசெய்யும் வகையில், உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் சுமார் 3 லட்சம் மின் கம்பங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மின் விநியோகத்தில் தடையோ, பற்றாக்குறையோ ஏற்படாமல் இருப்பதற்காக, பேட்டரி மூலம் மின்சாரத்தைச் சேமித்து வழங்கும் நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழைக் காலத்தில் துரிதமாகச் செயல்படுவதற்குக் களப்பணியாளர்கள் மற்றும் அவசரகாலப் பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பருவமழைக் காலத்தில் எந்தவிதமான மின் விநியோகப் பாதிப்புகளும் ஏற்படாத வகையில் மின் வாரியம் முழுத் தயார்நிலையில் உள்ளது என்றும், பொதுமக்கள் மழைக் காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆசிரியர்கள் குழு.....