by Vignesh Perumal on | 2025-10-03 03:29 PM
தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 3, 2025) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
செப்டம்பர் 27-ஆம் தேதி, நாமக்கல்லில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரைக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, அக்கூட்ட நெரிசலால் நாமக்கல் எஸ்.எஸ். திரையரங்கம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை மீது த.வெ.க.வினர் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில், மருத்துவமனைக்கு சுமார் ₹5 லட்சம் அளவுக்குச் சேதம் ஏற்பட்டதாகவும், மேலும் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாகவும் சதீஷ்குமார் மீது நாமக்கல் மாவட்டக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இதனால், தாம் கைது செய்யப்படலாம் என்று கருதிய சதீஷ்குமார், முன்ஜாமீன் கோரிச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, சதீஷ்குமார் தரப்பிடம் கடுமையான கேள்விகளை எழுப்பினார்.
"கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், எதுவும் தெரியாது என்று மனுதாரர் எப்படி கூறலாம்? சொந்தக் கட்சியினரைக் கட்டுப்படுத்தத் தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா? " என்று அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி எழுப்பினார். காவல்துறை தரப்பில், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், சதீஷ்குமார் மற்றும் அவரது கட்சியினரின் செயல்பாடுகளால் சேதங்கள் ஏற்பட்டது நிரூபிக்கப்பட்டது.
நீதிபதியின் கேள்விகள் மற்றும் அரசுத் தரப்பின் ஆதாரங்களைத் தொடர்ந்து, சதீஷ்குமாருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவால், நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் மீது காவல்துறை நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆசிரியர்கள் குழு.....