by Vignesh Perumal on | 2025-10-03 03:03 PM
திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த 2000-ஆம் ஆண்டு கள்ள நோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றப் பிணைக்குப் பிறகு 25 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பிடியானை (வாரண்ட்) குற்றவாளி ஒருவரை, நகர் தெற்குப் போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்தனர்.
கடந்த 2000-ஆம் ஆண்டு, கள்ள நோட்டு வழக்கில் நிலக்கோட்டையைச் சேர்ந்த லட்சுமணன் (44) என்பவர் நகர் தெற்கு போலீசாரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், நீதிமன்றப் பிணை பெற்று வெளியே வந்த லட்சுமணன், அதன்பின்னர் சுமார் 25 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார்.
இதன் காரணமாக, திண்டுக்கல் நீதிமன்றம் அவருக்கு எதிராகப் பிடியானை (வாரண்ட்) பிறப்பித்தது.
நீதிமன்றப் பிடியானையை நிறைவேற்றும் விதமாக, துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) கார்த்திக் உத்தரவின் பேரில், நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில், சார்பு ஆய்வாளர் பிரபாகரன், சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆரோக்கிய அமுதா மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீசார் நடத்திய தீவிர விசாரணைக்குப் பிறகு, லட்சுமணன் நிலக்கோட்டையில் இருந்து தூத்துக்குடிக்குச் சென்றபோது, அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட லட்சுமணன் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு, 25 ஆண்டுகள் நிலுவையில் இருந்த பிடியானையை போலீசார் நிறைவேற்றினர்.
ஆசிரியர்கள் குழு.....