by Vignesh Perumal on | 2025-10-03 02:45 PM
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரிய மனுவைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (அக்டோபர் 3, 2025) நிராகரித்தது. அதே சமயம், சம்பவம் குறித்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் இனி அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெளிவுபடுத்தினர்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான பொதுநல வழக்குகள் மற்றும் த.வெ.க. நிர்வாகிகள் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தன.
கூட்ட நெரிசல் விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், கடுமையான கருத்துக்களைத் தெரிவித்தனர்:
"மனுதாரர் பாதிக்கப்பட்டவரா? போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மாற்றலாம். ஆனால், முதற்கட்ட விசாரணை நிலையிலேயே சி.பி.ஐ. விசாரணை கோரப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம்" என்று கூறி, அந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
பொதுநல மனுக்கள் மீதான விசாரணையின்போது, நீதிபதிகள் அரசு தரப்புக்கும், த.வெ.க. தரப்புக்கும் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்:
மாநில நெடுஞ்சாலையில் எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது? விஜய் பரப்புரைக்கு அனுமதி கொடுத்த கடிதம் எங்கே? அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் கூட்டம் நடத்தப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம் நடைபெறவில்லை. சாலையின் வடபகுதிக்கே அனுமதி அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் குடிநீர், சுகாதார வசதிகள் இருந்தனவா? அவற்றை காவல்துறை கண்காணித்ததா? கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து தருவது அவசியம். "குடிமக்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். எந்தக் கட்சியாக இருந்தாலும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை." அரசின் பாதுகாப்பு அமைப்பு முறையாகச் செயல்பட வேண்டும். இந்தக் கூட்டத்திற்கு யாரும் மக்களைக் கட்டாயப்படுத்தி வரச் சொல்லவில்லை.
தமிழக அரசும், த.வெ.க-வும் இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.
அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் இன்று விசாரிக்கப்பட்டது.
விதிகள் வரையறுக்கப்படும் வரை, புதிய கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று அரசு தரப்பு தெரிவித்தது. "ஏற்கனவே அனுமதி பெற்றுள்ள கட்சிகளின் கூட்டங்களுக்குத் தடையில்லை. மேலும், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் அரசியல் கூட்டங்களுக்கு இனி அனுமதி கிடையாது" என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
இழப்பீடு தொடர்பான மனுக்களுக்குப் பாதிக்கப்பட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கூட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை என இரு தரப்பிலும் ஏற்பட்ட நிர்வாகக் குறைபாடுகள் குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
ஆசிரியர்கள் குழு.....