by yogabalajee on | 2025-09-05 01:19 PM
மதுரை தமுக்கம் மைதானத்தில், செப்டம்பர் 5 முதல் 15 வரை 10 நாட்கள் நீளும் புத்தகத் திருவிழா இன்று (செப்.5) மாலை 6:00 மணிக்கு துவங்குகிறது. கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில், அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் தியாகராஜன் விழாவை சிறப்பாக துவக்கி வைக்கின்றனர்.
தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும் இத்திருவிழாவில், 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள் குளிரூட்டப்பட்ட அரங்குகளில் புத்தகங்களை காட்சிப்படுத்துகின்றன. வாசகர்கள் கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் அறிவை விரிவுபடுத்தும் வகையிலும், பொழுதுபோக்கை ஊக்குவிக்கும் சிறப்பு அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், தினமும் மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை பள்ளி மாணவர்கள், 5:00 மணி முதல் 6:00 மணி வரை கல்லூரி மாணவர்கள் தங்கள் கலைநிகழ்ச்சிகளை வழங்குகின்றனர். அதன் பின் மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நடைபெற உள்ளது.
மதுரையிலுள்ள வாசகர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவையும் பொழுதுபோக்கையும் இணைத்து வழங்கும் இந்த விழா, பெரும் சிறப்புடன் நடைபெறவுள்ளது.