by Vignesh Perumal on | 2025-07-31 11:23 AM
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அண்மையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய முதல்வரிடம், அவரது உடல்நலம் குறித்து பிரேமலதா விசாரித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, பிரேமலதா விஜயகாந்த் உடன் அவரது சகோதரரும் தேமுதிக பொருளாளருமான எல்.கே. சுதீஷ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி ஆகியோரும் உடனிருந்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பிய நிலையில், அவரைச் சந்தித்து நலம் விசாரிக்கப் பிரேமலதா விஜயகாந்த் சென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், அண்மையில் காலமான முதல்வர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரர் மு.க.முத்து மறைவுக்குத் தன்னால் நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும், தற்போது அந்த மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் ஆறுதல் தெரிவித்ததாகவும் பிரேமலதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்