by Vignesh Perumal on | 2025-07-29 03:27 PM
திண்டுக்கல் மாவட்டம் குருந்தம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மேற்கூரை, வடமதுரை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரெனப் பெயர்ந்து துண்டு துண்டாகத் தொங்கியது. இந்தச் சம்பவத்தால் பேருந்தில் பயணித்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
குருந்தம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கிப் பயணிகள் நிறைந்த அரசுப் பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. பேருந்து வடமதுரை அருகே உள்ள ஒரு பகுதியை அடைந்தபோது, எதிர்பாராதவிதமாக அதன் மேற்கூரை, பலத்த காற்றின் காரணமாகவோ அல்லது பழையதன் காரணமாகவோ திடீரெனப் பெயர்ந்து, பல இடங்களில் துண்டு துண்டாகக் கிழிந்து தொங்கியது.
இந்த எதிர்பாராத நிகழ்வால் பேருந்திலிருந்த பயணிகள் பதற்றமடைந்தனர். உடனே சுதாரித்துக் கொண்ட பேருந்தின் ஓட்டுநர், பேருந்தை உடனடியாக சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினார். அதைத் தொடர்ந்து, நடத்துனர் பயணிகளைப் பதற்றப்பட வேண்டாம் என அறிவுறுத்தி, அவர்களை மற்றொரு மாற்றுப் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன், பயணிகள் எவரும் காயமின்றி தப்பினர்.
மேற்கூரை உடைந்த நிலையில் இருந்த பேருந்தை, அப்படியே இயக்குவது ஆபத்து என்பதால், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தங்களது சமயோசித புத்தியைப் பயன்படுத்தினர். பிஞ்சு போன தகரங்களை கயிறு மூலம் தற்காலிகமாகக் கட்டிப் பாதுகாத்தனர். அதன் பின்னர், பேருந்தை மெதுவாக இயக்கியபடியே, திண்டுக்கல்லில் உள்ள அரசுப் பேருந்து டெப்போவிற்குச் கொண்டு சென்றனர்.
இந்தச் சம்பவம், அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு குறித்துப் பொதுமக்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. போக்குவரத்துத் துறை இது குறித்துக் கவனம் செலுத்தி, பழைய பேருந்துகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.