by Vignesh Perumal on | 2025-07-29 03:14 PM
திருச்சி மாவட்டம், முடி கண்டம் கிராமம் மாயனூர் தஞ்சாவூர் கட்டளை வாய்க்காலில் மிதந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம், காவல்துறையினரின் உதவியுடன் சமூகச் செயற்பாட்டாளரால் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருச்சி முடி கண்டம் கிராமம், மாயனூர் தஞ்சாவூர் கட்டளை வாய்க்காலில் உள்ள முடி கண்டம் பாலம் மேற்கு குடி பிரிவு சாலைக்கு அருகே, சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சடலம் தண்ணீரில் மிதந்துகொண்டிருப்பதாக மணிகண்ட காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், மணிகண்ட காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்தில் கட்டளை வாய்க்காலில் நீரில் மூழ்கிய நிலையில், தோல் உரிந்த நிலையில் சடலம் இருந்தது. இறந்துபோன அந்தப் பெண்ணின் பெயர், விலாசம் உள்ளிட்ட எந்தத் தகவலும் தெரியவில்லை. சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், அதனை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.
அடையாளம் தெரியாத அந்தப் பெண் சடலத்திற்கு உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில், உடலை உரிமை கோர யாரும் வரவில்லை. நீண்ட நாட்கள் காத்திருந்த பிறகும் யாரும் வராததால், சடலத்தை நல்லடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், மணிகண்ட காவல் நிலைய இரண்டாம் நிலைக் காவலர் ஆரோக்கிய கிங்ஸ்லி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் யோகா ஆசிரியருமான விஜயகுமாருக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
தகவலின் அடிப்படையில், திருச்சி குழுமிக்கரை மயானத்தில், மணிகண்ட காவல் நிலைய இரண்டாம் நிலைக் காவலர் முன்னிலையில், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், உரிமை கோரப்படாத அந்த உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதிச் சடங்குகளைச் செய்து நல்லடக்கம் செய்தார்.
இதுபோன்ற மனிதாபிமான செயல்கள் சமூகத்தில் உள்ள மனிதநேயத்தையும், ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையையும் எடுத்துக்காட்டுகின்றன.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்