by Vignesh Perumal on | 2025-07-29 10:36 AM
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அரசுத் தொடக்கப் பள்ளியில் 237 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், தலைமையாசிரியர் பணியிடம் மற்றும் ஆங்கில வழிக் கல்விக்கான இரண்டு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகப் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆங்கில வழிக் கல்வி மாணவர்கள் தமிழ் வழிக் கல்வியுடன் இணைந்து பாடம் கற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தாடிக்கொம்பு அரசுத் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியர் இல்லாததால் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லாததால், அந்த மாணவர்களும் தமிழ் வழிக் கல்வி மாணவர்களுடன் சேர்த்து பாடம் கற்க வேண்டியுள்ளது. இதனால் ஆங்கில வழிக் கல்விக்கான சிறப்புப் பயிற்சி கிடைக்காமல் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகப் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பள்ளியில் மொத்தமாக 5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதில், நேற்று (திங்கட்கிழமை) வாரத்தின் முதல் நாளான அன்று, 3 ஆசிரியர்கள் விடுமுறையில் சென்றதால், மீதமுள்ள இரு ஆசிரியர்களே அனைத்து வகுப்புகளையும் கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுபோன்ற நிலை அடிக்கடி ஏற்படுவதாகவும், இது மாணவர்களின் கற்றல் திறனைப் பாதிப்பதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பள்ளியின் இந்த அவல நிலை குறித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் எனப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காலியாக உள்ள தலைமையாசிரியர் மற்றும் ஆங்கில வழிக் கல்வி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், பள்ளியை முறையாக நடத்தி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்