by Vignesh Perumal on | 2025-07-29 05:50 AM
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், அரசுத் தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாற அனுமதி கோரியுள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், "வழக்கு விசாரணையை விரைவில் முடிப்பதற்காகத்தான் நான் அப்ரூவராக மாறுகிறேன்; விசாரணையைக் காலதாமதப்படுத்துவதற்காக நான் மாறவில்லை" எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சாத்தான்குளம் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவராகவும், அப்போது சாத்தான்குளம் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்தவருமான ஸ்ரீதர், தன்னை அரசுத் தரப்பு சாட்சியாக மாற்றக் கோரி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இது வழக்கில் பெரும் திருப்பமாகப் பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த முடிவுக்குப் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து அவர் தனது மனுவில் விளக்கம் அளித்துள்ளார். "இந்த வழக்கை விரைவாக முடிப்பதற்கான ஒரு முயற்சியாகவே நான் அப்ரூவராக மாறுகிறேன். வழக்கை மேலும் இழுத்தடிக்கும் நோக்கமோ, காலதாமதப்படுத்தும் எண்ணமோ எனக்கு இல்லை" என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு, சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிபிஐ இந்த வழக்கை விசாரித்து, அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீதரின் இந்த அப்ரூவர் மனு, சாத்தான்குளம் வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் குழு...