by Vignesh Perumal on | 2025-07-28 06:38 PM
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள கொண்டையம்பட்டி பெருமாள்பட்டியில், கணவர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியதில் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் மார்நாடு (45). சொந்தமாக டிப்பர் லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவி ரெங்காதேவி (39) என்பவருக்கும் சந்தியாதேவி என்ற மகள் உள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, மார்நாடு பெருமாள்பட்டி மந்தையில் நடைபெற்று வந்த கழிவுநீர் சாக்கடைப் பணிக்காக எம்-சாண்ட் மண்ணை லாரியில் கொண்டு வந்தார். மண்ணைக் கொட்டிய பின், லாரி டயர்களில் மண் ஒட்டியிருந்ததால், அதனை ரெங்காதேவி எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது, மார்நாடு லாரியைப் பின்னோக்கி எடுத்தபோது, எதிர்பாராத விதமாக ரெங்காதேவி மீது மோதியது. இதில், ரெங்காதேவிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
விபத்து நடந்ததும், மார்நாடும் அக்கம் பக்கத்தினரும் உடனடியாக ரெங்காதேவியை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ரெங்காதேவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் ஓட்டிய லாரி மோதி மனைவி உயிரிழந்த இச்சம்பவம், பெருமாள்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இணை ஆசிரியர்- சதீஷ்குமார்