by Vignesh Perumal on | 2025-07-27 03:46 PM
தமிழகத்தில் மன்னர்களான ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியோருக்குப் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், சோழர்களின் நீர் மேலாண்மை, ஆட்சி முறை மற்றும் சைவ சித்தாந்தம் குறித்துப் புகழ்ந்துரைத்தார்.
ராஜேந்திர சோழனின் பிறந்த நாள், சோழர் பேரரசு முடிசூடி 1000 ஆண்டுகள் நிறைவு மற்றும் கங்கை வெற்றியை நினைவுகூரும் முப்பெரும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "சோழப் பேரரசர்கள் ராஜராஜன், ராஜேந்திரன் ஆகிய இரு பெயர்களும் பாரதத்தின் இரு பிரகடனங்கள். இலங்கை, மாலத்தீவு, தென்கிழக்கு ஆசியா வரை சோழப் பேரரசு நீண்டிருந்தது" எனப் பெருமிதத்துடன் கூறினார். சோழர்களின் புகழை உலகறியச் செய்யும் வகையில், இந்த இரு மாமன்னர்களுக்கும் தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும் எனப் பிரதமர் அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், "உலகம் முழுவதும் பேசப்படும் நீர் மேலாண்மைக்குச் சோழர்களே முன்னோடிகள்" என்று பாராட்டினார். சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட நீர் மேலாண்மைத் திட்டங்கள், அணைகள், ஏரிகள் போன்றவை இன்றும் வியக்கத்தக்கவை என்பதையும், அவை தற்போதைய சூழலுக்கும் பாடமாக அமைவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆன்மீகம் குறித்துப் பேசிய பிரதமர், "சைவ சித்தாந்தம் உலக சங்கடங்களுக்குத் தீர்வளிக்கும் பாதை. 'அன்பே சிவம்' என்றார் திருமூலர். இதை நாம் கடைப்பிடித்தால் உலகின் அனைத்து சங்கடங்களுக்கும் தீர்வு கிடைக்கும்" என்று கூறினார். மேலும், "'அன்பே சிவம்' என்பது எவ்வளவு தொலைநோக்கான பார்வை" என்றும் அவர் வியந்தார். தமிழகத்தின் ஆன்மீகச் சிறப்பு மற்றும் தத்துவ ஞானங்களின் ஆழத்தை இந்தப் பேச்சு எடுத்துக்காட்டியது.
பிரதமரின் இந்தப் பயணம், தமிழகத்தின் பண்டைய வரலாறு, கலாச்சாரம் மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்திற்கு மத்திய அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.