by Vignesh Perumal on | 2025-07-26 10:34 AM
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ளவிருக்கும் நடைபயணத்திற்குத் தமிழக காவல்துறை தடை விதிக்கவில்லை என விளக்கமளித்துள்ளது. எனினும், நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்த புகாரின் பேரில், அவரது மனுவைப் பரிசீலித்து அனுமதி வழங்குமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது "உரிமை மீட்பு பயணம்" என்ற பெயரில் நாளை (ஜூலை 27) முதல் நடைபயணம் தொடங்கவுள்ள நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சியின் பெயர் மற்றும் கொடியைப் பயன்படுத்த அன்புமணிக்கான தடை விதிக்கக் கோரி டிஜிபியிடம் மனு அளித்திருந்தார். இதனால், நடைபயணத்திற்கு அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், தமிழக காவல்துறை வட்டாரங்கள், "அன்புமணி ராமதாஸின் நடைபயணத்திற்குத் தடை விதிக்கவில்லை" என்று விளக்கமளித்துள்ளன.
இது தொடர்பாக, தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அனைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்.பி.க்கள்) மற்றும் மாநகரக் காவல் ஆணையர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அந்தச் சுற்றறிக்கையில், "அந்தந்த காவல் ஆணையர் மற்றும் எஸ்.பி-க்கள், நடைபயண அனுமதி கோரும் மனுக்களைப் பெற்று பரிசீலனை செய்து அனுமதி கொடுக்குமாறு" அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், "நிறுவனரின் அனுமதி இல்லாமல் நடைபயணம் மேற்கொள்ளக்கூடாது" என டாக்டர் ராமதாஸ் தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளதால், அந்த மனுவையும் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது, பாமகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் மற்றும் தலைமையின் அதிகார மோதலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.