by Vignesh Perumal on | 2025-07-26 09:42 AM
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று (சனிக்கிழமை) தமிழகம் வருகிறார். இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.4,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைகிறார். அவரை தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் பாஜக தலைவர்கள் வரவேற்க உள்ளனர்.
தூத்துக்குடியில் நடைபெற உள்ள அரசு விழாவில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவற்றில் முக்கியமாக, விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம் முதன்மை பெறுகிறது. இந்தப் புதிய விரிவாக்கம், விமான நிலையத்தின் செயல் திறனை அதிகரித்து, இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமான நிலைய விரிவாக்கம் தவிர, துறைமுக வளர்ச்சித் திட்டங்கள், புதிய சாலைப் பணிகள், மின் திட்டங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை தொடர்பான திட்டங்கள் எனப் பலதரப்பட்ட வளர்ச்சிப் பணிகள் இதில் அடங்கும். இந்தத் திட்டங்கள், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தொழில் வளர்ச்சியைப் பெருக்கும் எனக் கூறப்படுகிறது.
பிரதமரின் இந்தப் பயணம், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தூத்துக்குடி முழுவதும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பிரதமர் கலந்து கொள்ள இருக்கும், விழா பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனை ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.