by Vignesh Perumal on | 2025-07-24 12:34 PM
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா, மட்டப்பாறை ராமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள "கள்ளர் பள்ளிகள் மற்றும் மாணவர் விடுதிகள்" இனி "சமூக நீதி விடுதிகள்" என்று அழைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வரலாற்று ரீதியாகப் பின்தங்கிய சமூகத்தினருக்காக அமைக்கப்பட்ட "கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் விடுதிகள்" சமூக நீதியின் அடையாளமாகப் பாதுகாக்கப்பட்டு, இனி "சமூக நீதி பள்ளிகள் மற்றும் விடுதிகள்" என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிவித்தார். இந்தப் பெயர் மாற்றம், அனைவருக்கும் பொதுவான மற்றும் சமத்துவமான கல்வியை வழங்குவதன் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
ஆனால், இந்த அறிவிப்பு ராமராஜபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் சமுதாய அடையாளத்துடன் நீண்டகாலமாகப் பின்னிப்பிணைந்திருந்த "கள்ளர் பள்ளி" என்ற பெயரை மாற்றுவது தங்களின் பாரம்பரியத்தையும், சமூக அடையாளத்தையும் அழிக்கும் முயற்சி என்று அவர்கள் கருதுகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது, "இந்தக் கல்வி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நலனுக்காகவும், அவர்களது வரலாற்றுப் பின்னணியையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை. தற்போதைய பெயர் மாற்றம், ஒரு சமூகத்தின் அடையாளத்தைப் பொதுமையாக்க முயல்வதாகவும், அது சமூக நீதியாகாது" என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக, ராமராஜபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் தங்கள் இல்லங்களின் முன்பு கருப்புக் கொடிகளை ஏந்தியுள்ளனர். இந்த நூதனப் போராட்டம் மூலம், தங்கள் சமூக அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான கோரிக்கையை அவர்கள் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.