by Vignesh Perumal on | 2025-07-24 12:20 PM
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் முன்னாள் தலைவரும், கண் மருத்துவ உலகின் தலைசிறந்த ஆளுமைகளில் ஒருவருமான டாக்டர் நம்பெருமாள் சாமி இன்று காலமானார். அவரது மறைவுக்கு மருத்துவ உலகம், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
டாக்டர் நம்பெருமாள் சாமியின் உடல், மதுரை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை 4 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை), அவரது சொந்த கிராமமான தேனி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.
டாக்டர் நம்பெருமாள் சாமி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர்களில் ஒருவர். கண் மருத்துவப் பேராசிரியரான இவர், தனது மருத்துவ வாழ்க்கையை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கினார். அவரது சாதனைகள் சில, 1967 இந்தியாவின் குறைந்த பார்வைக்கான கண் மருத்துவமனையை நிறுவினார். அமெரிக்கப் பயிற்சி, அமெரிக்காவில் பயிற்சி பெற்ற பிறகு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்தியாவின் முதல் விட்ரியஸ் அறுவை சிகிச்சை மையத்தைத் தொடங்கினார்.
1979, அரவிந்த் கண் மருத்துவமனையில் ரெட்டினா விட்ரியஸ் மையத்தையும் தொடங்கினார்.
கண் மருத்துவத்தில் அவரது பங்களிப்புடன், சமூக அக்கறையுடனும் பல திட்டங்களை முன்னெடுத்தார். மத்திய அரசின் உதவியுடன் உலக நீரிழிவு அறக்கட்டளை மற்றும் டோக்கியோவின் டாப்கான் நிறுவனத்துடன் இணைந்து நீரிழிவு விழித்திரை நோய்க்கான சிறப்பு மையத்தை நிறுவினார். இதன்மூலம், நீரிழிவு குறித்த விழிப்புணர்வு, சுகாதாரக் கல்வி, மற்றும் நீரிழிவு விழித்திரை நோய்க்கான பயிற்சி, ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிராமப்புறங்களில் கண் மருத்துவ மையங்களை நிறுவி, அடித்தட்டு மக்களுக்கும் கண் சிகிச்சை கிடைக்கச் செய்தார். டாக்டர் ஜி. வெங்கடசாமி கண் ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்குவதிலும் இவர் முக்கியப் பங்காற்றினார்.
டாக்டர் நம்பெருமாள் சாமியின் அரும்பணிகளைப் பாராட்டி, அவருக்கு பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அகில இந்திய கண் மருத்துவ சங்கம் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்துள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு, உலகின் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்களின் 100 பேர் கொண்ட பட்டியலை டைம் இதழ் வெளியிட்டபோது, அதில் டாக்டர் நம்பெருமாள் சாமி இடம்பிடித்திருந்தார் என்பது அவரது உலகளாவிய அங்கீகாரத்திற்குச் சான்றாகும்.
டாக்டர் நம்பெருமாள் சாமியின் மறைவு, இந்திய மருத்துவ உலகிற்கும், குறிப்பாகக் கண் மருத்துவத் துறைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.