by Vignesh Perumal on | 2025-07-23 11:29 AM
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. "ஆபரேஷன் சிந்தூர்" மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதே இந்த ஒத்திவைப்புக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக, சமீபத்திய நாட்களில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள "ஆபரேஷன் சிந்தூர்" தொடர்பான விவகாரத்தில் அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
பிஹார் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் குறித்து எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளன. இந்தத் திருத்தங்களில் முறைகேடுகள் நடப்பதாகவும், அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இதுகுறித்து விவாதிக்க அனுமதி கோரி அமளியில் ஈடுபட்டனர்.
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி, அவையின் மையப்பகுதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். இதனால் அவையின் அன்றாட நடவடிக்கைகளை நடத்த முடியாத சூழல் உருவானது. இதனையடுத்து, அவைத் தலைவர்கள் இரு அவைகளையும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.
குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கரின் ராஜினாமா, மற்றும் பல்வேறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து விவாதம் கோரும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.