by Vignesh Perumal on | 2025-07-23 10:48 AM
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதில் தொடர்ந்து தடை ஏற்படுத்தப்படுவதாகவும், இதில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் குற்றம்சாட்டி, பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இன்று முதல் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரெட்டியார்சத்திரம் பகுதியில் பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டு, அதிகாரிகள் தரப்பில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட நிலையில், இந்தப் பணி தொடர்ந்து தாமதமாகி வருவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலரின் தூண்டுதலின் பேரில், திமுக கட்சியினர் சில நபர்களை வைத்து, பள்ளி கட்டிடம் கட்டுவதற்குச் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி நேற்று மனு பெற்றதாகப் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, ஊராட்சி செயலாளர் இன்று காலை பொதுமக்களை ரெட்டியார்சத்திரம் திமுக கட்சி அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். ஆனால், ஊர் மக்கள் யாரும் கட்சி அலுவலகத்திற்குப் பேச்சுவார்த்தைக்குச் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மாலையில், அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அந்தக் கட்டிடத்தைக் கட்டித் தருகிறோம், அதில் பள்ளிக்கூடம் செயல்படட்டும் என்றும், பள்ளி கட்டிடத்தில் மேற்கூரை அமைத்து தருகிறோம், அதில் அங்கன்வாடி செயல்படட்டும் என்றும் ஒன்றிய செயலாளர் மணி கூறியதாகச் சில நபர்கள் ஊர் பொதுமக்களைத் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளனர்.
கட்டிடம் கட்டுவது போன்ற வளர்ச்சிப் பணிகளுக்கும் அரசியல் கட்சியினருக்கும் என்ன சம்பந்தம், அதிகாரிகள் கட்டிடம் கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்த நிலையில், இவர்கள் எதற்காக இதில் தலையிடுகின்றனர் என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதில் ஏதேனும் முறைகேடில் ஈடுபட்டிருக்கலாமோ என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
பள்ளி கட்டிடம் கட்டுவதற்குத் தொடர்ந்து தடை ஏற்படுத்தும் முயற்சி நடைபெற்று வருவதாகக் கருதிய பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், தங்கள் இல்லங்களில் கருப்புக்கொடி கட்டி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். மேலும், தங்கள் குழந்தைகளை இன்று (ஜூலை 23, 2025) முதல் பள்ளிக்கு அனுப்புவதில்லை என்ற முடிவையும் எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் போராட்டம் குறித்து மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறையும் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றன என்பது உற்றுநோக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இந்தப் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.