by Vignesh Perumal on | 2025-07-22 12:15 PM
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், வீட்டின் கழிப்பறையில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் தவறி விழுந்த 11 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் சங்கர்தாஸ் என்பவரது 11 மாதப் பெண் குழந்தை, இன்று காலை வீட்டின் கழிப்பறையில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது, நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த ஒரு வாளியில் எதிர்பாராதவிதமாக அக்குழந்தை தவறி விழுந்துள்ளது.
குழந்தையின் அழுகுரல் கேட்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கழிப்பறைக்குச் சென்று பார்த்தபோது, குழந்தை வாளிக்குள் மூழ்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாகக் குழந்தையை மீட்ட பெற்றோர், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அக்குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையை இழந்த பெற்றோரும் உறவினர்களும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.
ஆசிரியர்கள் குழு...