| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

"சமூகநீதி திருவிழா"...! திமுக கோட்டையாக்க சூளுரை..! ஏராளமானோர் பங்கேற்பு...!

by Vignesh Perumal on | 2025-07-21 12:58 PM

Share:


"சமூகநீதி திருவிழா"...! திமுக கோட்டையாக்க சூளுரை..! ஏராளமானோர் பங்கேற்பு...!

புதிய திராவிடர் கழகம் சார்பில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு "சமூகநீதி திருவிழா" நேற்று மாலை 3 மணியளவில் காடையூர், காங்கேயம் அருகே உள்ள கருப்பராயன் திடலில் நடைபெற்றது. புதிய திராவிடர் கழகத்தின் தலைவர் கே.எஸ். ராஜ் கவுண்டர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, அனைத்து சமுதாயத் தலைவர்களையும் ஒரே மேடையில் ஒன்றிணைத்த ஒரு சிறப்பான பொதுக்கூட்டமாக அமைந்தது.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஹரி நாடார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) மாநில நிர்வாகி ஆகியோர், தமிழகத்தில் சமூக நீதிக்கான ஒரே அரசு திமுக தான் என்று வலியுறுத்தினர். கொங்கு மண்டலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், அவர் பொறுப்பில் இருப்பதாலேயே கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற சமூகநீதிக் கூட்டங்கள் இப்பகுதிகளில் நடத்தப்படுகின்றன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக, கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய நிகழ்வான வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பலர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

சுமார் 1000-க்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய மக்களையும் ஒரே மேடையில் ஒன்று திரட்டி, பல தலைவர்களை அழைத்துப் பிரமாண்டமாக இந்த நிகழ்வை நடத்திய புதிய திராவிடர் கழகத் தலைவர் கே.எஸ். ராஜ் கவுண்டர் அரசியல் சூளுரை ஆற்றினார்.


கே.எஸ். ராஜ் கவுண்டர் தனது உரையில், விரைவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்பிக்கும் 6-வது மாநில மாநாடு நடைபெற உள்ளதாக அறிவித்தார். "இப்போது சிலர் ரோட் ஷோ செல்கிறார்கள். நவம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் பங்குபெறும் ரோட் ஷோவைப் பார்க்கப் போகிறார்கள் அனைவரும். சுமார் 1 லட்சம் இருக்கைகள் போட்டு உதயநிதி பங்கேற்கும் அந்த 6-வது மாநில மாநாடு கொங்கு மண்டலத்தில் மட்டுமில்லாமல், தமிழகத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என அவர் சூளுரைத்தார். இந்த பேச்சு, சமீபத்தில் 2-வது மாநாடு நடத்திய தமிழக வெற்றி கழகத்தையும், நடிகர் விஜய்யின் ரோட் ஷோவையும் எதிர்ப்பது போன்று அமைந்தது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் கொங்கு மண்டலம் அரசியல் ரீதியாகப் படுத்தப்படாமல், வளர்ச்சி அடையாமல் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதாக ராஜ் கவுண்டர் குற்றம் சாட்டினார். ஆனால், தற்போது நடக்கும் திமுக தலைமையிலான சமூக நீதி அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளால் கொங்கு மண்டலம் சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்குக் கொங்கு களம் பெரிய ஏமாற்றத்தை அளிக்கும் எனவும் அவர் பேசினார்.

இறுதியாகப் பேசிய கே.எஸ். ராஜ் கவுண்டர், அனைத்து சமுதாய மக்களும் அரசியல் ரீதியாகப் படுத்தப்பட்டு ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்றால், இந்த சமூக நீதி அரசாகச் செயல்படும் திமுகவை வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும், கொங்கு மண்டலத்தைச் சமூக நீதி மண்டலமாக மாற்ற வேண்டுமானால், அனைவரும் ஒரே அணியில் ஒன்று திரண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


கே.எஸ். ராஜ் கவுண்டரின் உரையானது, கொங்கு மண்டலத்தை வலுப்படுத்தவும், திமுகவின் கோட்டையாக மாற்ற முயற்சி செய்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக இருந்தது. நவம்பர் மாதம் நடக்கும் புதிய திராவிடர் கழகத்தின் 6-வது மாநில மாநாடு கொங்கு மண்டலத்திலும், தமிழகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், உதயநிதி ஸ்டாலினின் வருகை இந்த முயற்சிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.









நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment