by Vignesh Perumal on | 2025-07-21 12:03 PM
திருச்சிராப்பள்ளி மாவட்டம் இடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற "வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் கண்காட்சி"யில், உலகின் முதல் பிளாஸ்டிக் நாணயங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமையில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மற்றும் சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்காட்சியில், உலகின் முதல் பிளாஸ்டிக் நாணயங்கள் குறித்து முகமது சுபேர் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், இந்த நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்ட டிரான்ஸ்னிஸ்ட்ரியா என்ற நாட்டின் பின்னணியை விளக்கினார். டிரான்ஸ்னிஸ்ட்ரியா, முன்பு மால்டோவாவின் ஒரு பகுதியாக இருந்ததாகவும், 1992-ஆம் ஆண்டில் அது பிரிந்து, அன்றிலிருந்து ரஷ்யாவால் ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டிரான்ஸ்னிஸ்ட்ரியா ரூபிள், ரஷ்ய ரூபிளுக்கு இணையானது என்றும், இது முதன்முதலில் 1994-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முகமது சுபேர், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட நாணயங்கள் ஆகஸ்ட் 22, 2014 முதல் புழக்கத்தில் விடப்பட்டன என்ற முக்கியத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். இந்த ரூபிள் நாணயங்கள், மேம்பட்ட பாலிகார்பனேட் பொருளால் ஆனவை என்றும், அவை விளிம்பு கூறுகள், மைக்ரோ-பிரிண்டிங் மற்றும் புற ஊதா மற்றும் அகச்சிவப்பு ஒளியில் வெளிப்படும் போது ஒளியின் பிரதிபலிப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளதாகவும் விளக்கினார்.
மாஸ்கோவில் உள்ள கோஸ்னாக் மின்ட் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இந்த நாணயங்கள், 1, 3, 5 மற்றும் 10 ரூபிள் என நான்கு பிளாஸ்டிக் நாணயங்களின் தொகுப்பாகும். அவை அனைத்தும் தற்போது புழக்கத்தில் உள்ளன. டிரான்ஸ்னிஸ்ட்ரியன் பிளாஸ்டிக் நாணயங்கள் உடையாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஒன்று மதிப்புள்ள ரூபிள் நாணயம் மஞ்சள் பழுப்பு நிறத்தில், வட்டம் வடிவத்தில் 26 மில்லிமீட்டர் அளவில் உள்ளது.
மூன்று மதிப்புள்ள ரூபிள் நாணயம் பச்சை நிறத்தில், சதுரம் வடிவத்தில் 26 மில்லிமீட்டர் அளவில் உள்ளது.
ஐந்து மதிப்புள்ள ரூபிள் நாணயம் நீல நிறத்தில், பென்டகன் வடிவத்தில் 28 மில்லிமீட்டர் அளவில் உள்ளது.
பத்து மதிப்புள்ள ரூபிள் நாணயம் சிவப்பு நிறத்தில், அறுகோணம் வடிவத்தில் 28 மில்லிமீட்டர் அளவில் உள்ளது.
இந்தக் கண்காட்சி மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் நாணயங்கள் மற்றும் உலக வரலாறு குறித்த ஆர்வத்தைத் தூண்டியது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.