| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

மு.க.முத்து காலமானார்..! அரசு நிகழ்ச்சிகள் ரத்து...!

by Vignesh Perumal on | 2025-07-19 10:45 AM

Share:


மு.க.முத்து காலமானார்..! அரசு நிகழ்ச்சிகள் ரத்து...!

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான திரு. மு.க. முத்து (76) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருந்த அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திரு. மு.க. முத்து, கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி – பத்மாவதி தம்பதிக்கு 1948-ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தவர் மு.க. முத்து. 1970-களில் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். 'பிள்ளையோ பிள்ளை', 'சமையல்காரன்', 'அணையாவிளக்கு', 'இங்கேயும் மனிதர்கள்', 'பூக்காரி' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தான் நடித்த சில படங்களிலும் பாடல்களைப் பாடியுள்ளார். திமுக மேடைகளிலும் கட்சியின் கொள்கை விளக்கப் பாடல்களைப் பாடி, தொண்டர்கள் மத்தியில் பிரபலமானவர்.

எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக சினிமாவில் களமிறக்கப்பட்டவர் என்ற பொதுவான கருத்து நிலவிய போதிலும், மு.க. முத்து நடித்த 'பிள்ளையோ பிள்ளை' படத்தின் படப்பிடிப்பை எம்.ஜி.ஆர் நேரடியாக வந்து கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2006-ஆம் ஆண்டு தேவா இசையில் வெளியான 'மாட்டுத் தாவணி' என்ற படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

மு.க. முத்துவின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருந்த அனைத்து அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை கழகம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.









நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment