| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

பள்ளிக் குழந்தைகளை...! பள்ளிக்கு அனுப்பாமல்...! பெற்றோர்கள் போராட்டம்...!

by Vignesh Perumal on | 2025-07-18 09:33 PM

Share:


பள்ளிக் குழந்தைகளை...! பள்ளிக்கு அனுப்பாமல்...! பெற்றோர்கள் போராட்டம்...!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அழகுபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித் தரக் கோரி பெற்றோர்களும், பொதுமக்களும் பள்ளிக் குழந்தைகளையும், அங்கன்வாடி குழந்தைகளையும் வகுப்புகளுக்கு அனுப்பாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும், பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்த போராட்டம் வெடித்துள்ளது.

அழகுபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று கிராம சபை கூட்டங்களில் பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அதிகாரிகளுக்கு மனுக்களும் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, அதிகாரிகள் ஆஸ்பெட்டாஸ் சீட்டு மட்டுமே மாற்றித் தர முடியும் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில், பழைய ஓடுகளை அகற்றிவிட்டு தகரக் கொட்டகை அமைக்க வாகனத்தில் கொண்டுவரப்பட்டவர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். "எங்களுக்குக் கட்டிடம் தான் வேண்டும், ஆஸ்பெட்டாஸ் சீட் வேண்டாம், எடுத்துச் செல்லுங்கள்" என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் அறிவித்தனர். காலை 10:30 மணியைக் கடந்தும் எந்த அதிகாரியும் பேச்சுவார்த்தைக்கு வராததால், பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கும், அங்கன்வாடிக்கும் அனுப்பாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 11 மணியளவில் அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர், "இதுவரை கட்டிடம் கேட்டு எங்களுக்கு எந்தக் கோரிக்கையும் வரவில்லை" என்று தெரிவித்தார். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், "நான்கு முறை கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இதற்கு மேலும் எதற்கு நாங்கள் தனியாக மனு அளிக்க வேண்டும்? ஆட்சியர் மற்றும் அமைச்சர் அவர்களிடம் நேரடியாக மனு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கிறீர்கள். பிறகு எதற்காக கிராம சபை கூட்டம் என்று ஒன்றை நடத்தி, அதில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று பொதுமக்களை ஏமாற்றுகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினர்.

பொதுமக்களின் கேள்விகளால் அதிர்ந்துபோன அதிகாரிகள், உடனடியாகக் கட்டிடம் கட்டித் தருவதாகக் கூறி, பள்ளிக் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வர கோரிக்கை விடுக்காமல் விரைந்து சென்றனர். பேச்சுவார்த்தை நடத்த வந்த சப்-கலெக்டரையும் வட்டார வளர்ச்சி அலுவலர் திரும்பிச் செல்ல அறிவுறுத்தியுள்ளார்.


இதுவரை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்காத வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இரண்டு நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்காவிட்டால், திங்கட்கிழமை முதல் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.





நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment