by Vignesh Perumal on | 2025-07-14 12:27 PM
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (ஜூலை 14, 2025) அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக அலுவலகம் மற்றும் கொடிக்கம்பம் அமைப்பதற்காகச் சட்டபூர்வமாக வாங்கப்பட்ட நிலத்தை, தி.மு.க பிரமுகர் ஒருவர் அத்துமீறி ஆக்கிரமித்துவிட்டதாகக் குற்றம்சாட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம், கன்னிவாடி புதுப்பட்டியைச் சேர்ந்த அதிமுக மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் கண்ணன் (எ) நல்லமுத்து மற்றும் ரெட்டியார்சத்திரம் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இவர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்களுக்குச் சொந்தமான நிலம், அதாவது அதிமுக அலுவலகம் மற்றும் கொடிக்கம்பம் அமைப்பதற்காகச் சுத்த கிரையம் செய்து வாங்கப்பட்ட இடம், ஒரு தி.மு.க பிரமுகரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டினர். இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டும், சம்பந்தப்பட்டவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட தி.மு.க பிரமுகர் மீது உடனடியாகச் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. நில ஆக்கிரமிப்புப் பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.