by Vignesh Perumal on | 2025-07-13 11:47 AM
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த பாளையம் மொடக்கு சாலையைச் சேர்ந்த மலர்க்கொடி (40) என்ற பெண்ணை, கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த பாலகுரு (25) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பாளையம் மொடக்கு சாலையைச் சேர்ந்த உமாநாத்தின் மனைவி மலர்க்கொடி. இவருடைய வீட்டின் அருகே வசித்து வரும் பாலகுரு என்பவருக்கும், மலர்க்கொடியின் குடும்பத்தினருக்கும் இடையே நீண்டகாலமாக பாதை பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்தப் பாதை தகராறு தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே அவ்வப்போது சண்டைகள் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இரவு, மலர்க்கொடியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பாலகுரு, அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார். பின்னர், அருகிலிருந்த தோட்டத்துக் கிணற்றுக்குள் மலர்க்கொடியை தூக்கி வீசியுள்ளார். அதிர்ஷ்டவசமாக, மலர்க்கொடிக்கு நீச்சல் தெரிந்ததால், கிணற்றின் படியைப் பிடித்து தப்பித்து கரைக்கு வந்துள்ளார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த அவர், உடனடியாக கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து மலர்க்கொடி குஜிலியம்பாறை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பாலகுருதான் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து, பாலகுருவை போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முன்விரோதம் காரணமாக நடைபெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.