by Vignesh Perumal on | 2025-07-13 11:28 AM
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், தனது அரசியல் கட்சியைத் தொடங்கிய பிறகு முதன்முறையாக இன்று (ஜூலை 13, 2025) நேரடி அரசியல் போராட்டத்தில் பங்கேற்றார். சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், காவல் நிலைய மரணங்களைக் கண்டித்து நடைபெற்றது.
அரசியல் களத்தில் தனது முதல் அடியை வலுவாகப் பதிக்கும் வகையில், ஆர்ப்பாட்டத்திற்கு கருப்புச் சட்டை அணிந்து வந்த விஜய், "சாரி வேண்டாம், நீதி வேண்டும்" என்ற பதாகையை ஏந்தியபடி தொண்டர்களுடன் இணைந்து கோஷமிட்டார். ஏராளமான தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் திரண்டதால் சிவானந்தா சாலை பரபரப்பாக காணப்பட்டது.
காவல் நிலைய மரணங்கள் குறித்துப் பேசிய விஜய், தமிழக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அஜித்குமார் மரணத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், "அஜித்குமார், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர். அந்தக் குடும்பத்துக்கு நேர்ந்த கொடுமைக்கு, முதல்வர் சார்... நீங்க 'சாரி' சொன்னீங்க. தப்பில்லை. ஆனால், இதே ஆட்சியில் 24 இளைஞர்கள் இதேபோல இறந்திருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்துக்கும் 'சாரி' சொல்லுங்கள்" என்று வலியுறுத்தினார்.
மேலும், அஜித்குமார் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட நிவாரணம் போல, காவல் நிலைய மரணத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விஜய் கோரிக்கை விடுத்தார்.
திமுக அரசின் மீது நேரடியாகப் பாய்ந்த விஜய், "அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு முதல் அஜித்குமார் வழக்கு வரை எல்லாவற்றுக்கும் நீதிமன்றம்தான் தலையிட்டு கேள்வி கேட்கிறது. நீதிமன்றம்தான் கேள்விகேட்க வேண்டும் என்றால், நீங்கள் எதற்கு சார்? உங்கள் ஆட்சி எதற்கு சார்? முதலமைச்சர் பதவி எதற்கு சார்?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
மேலும், "அதிகபட்சம் உங்களிடம் வரும் பதில், 'சாரி மா, நடக்கக்கூடாதது நடந்துடுச்சு மா' என்பதுதானே... இந்த வெற்று விளம்பர மாடல் திமுக சர்கார், இப்போது 'Sorry மா மாடல் சர்காரா' மாறிவிட்டது" என்று ஆவேசமாக விமர்சித்தார்.
விஜய்யின் இந்தப் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது கட்சியின் முதல் போராட்டத்திலேயே ஆளும் அரசுக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி விஜய் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.