by Vignesh Perumal on | 2025-07-13 10:23 AM
திருவள்ளூர் அருகே இன்று (ஜூலை 13, 2025) அதிகாலை இந்தியன் ஆயில் நிறுவனத்திலிருந்து பெங்களூருக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து, ரயில்வே கட்டமைப்புகளுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அப்பகுதியில் காற்றின் தரத்தையும் மோசமடையச் செய்துள்ளது.
சென்னை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து பெங்களூருக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற ஒரு சரக்கு ரயில், திருவள்ளூர் அருகே அதிகாலை நேரத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, ரயிலின் மூன்று பெட்டிகள் (வேகன்கள்) திடீரென தண்டவாளத்தில் இருந்து விலகி விபத்துக்குள்ளாகின. இதில் எரிபொருள் கசிந்து தீப்பிடித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ மளமளவெனப் பரவி டீசல் டேங்குகள் பற்றி எரிந்ததால், சுமார் 200 மீட்டர் அளவிற்கு தண்டவாளம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே தடத்தின் இருபுறமும் இருந்த மின் கம்பங்களில் உள்ள மின்சார வயர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.
இந்தத் தீ விபத்தால் யாருக்கும் எந்தவித உயிர்ச்சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை என தெற்கு ரயில்வே உறுதிப்படுத்தியுள்ளது. விபத்து நடந்தவுடன், தீயணைப்புத் துறையினர் மற்றும் ரயில்வே மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சேதமடைந்த மின் கம்பிகள் மற்றும் தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்து நடந்த பகுதியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகளையும், விசாரணையையும் ரயில்வே சார்பில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த வழித்தடத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 5.50 மணிக்கு மைசூரு புறப்படவிருந்த வந்தே பாரத் ரயில், காலை 6 மணிக்கு மைசூரு புறப்படவிருந்த சதாப்தி விரைவு ரயில், காலை 6.25 மணிக்கு திருப்பதிக்கு புறப்படவிருந்த சப்தகிரி விரைவு ரயில், காலை 7.15 மணிக்கு கோவைக்கு புறப்படவிருந்த சதாப்தி விரைவு ரயில், காலை 7.25 மணிக்கு பெங்களூரு புறப்படவிருந்த டபுள் டெக்கர் விரைவு ரயில், காலை 7.40 மணிக்கு பெங்களூரு புறப்படவிருந்த பிருந்தாவன் ரயில், காலை 9.15 மணிக்கு நகர்சோல் புறப்பட வேண்டிய நகர்சோல் விரைவு ரயில், மற்றும் காலை 10 மணிக்கு கோவைக்கு புறப்பட இருந்த கோவை அதிவிரைவு ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
விரைவு ரயில்கள் செல்லும் வழித்தடத்தில் எந்த நேரடிப் பாதிப்பும் இல்லை என்றாலும், பயணிகள் பாதுகாப்பிற்காகவும், சீரமைப்புப் பணிகளுக்காகவும் பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த எரிபொருள் ரயில் தீ விபத்தால், திருவள்ளூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மோசமடைந்துள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. எரிபொருள் பற்றி எரிவதால் காற்றில் நுண்துகள் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், காற்றின் தரம் மிதமான அளவில் மோசமடைந்துள்ளதாகவும் வாரியம் கூறியுள்ளது.
ரயில்வே நிர்வாகம், சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து, ரயில் சேவையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.