by Vignesh Perumal on | 2025-07-11 11:21 AM
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடி வீரர்களில் ஒருவரான மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை, ஜூலை 11) சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில், அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற 268வது குருபூஜை விழாவிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அழகுமுத்துக்கோனின் தியாகத்தைப் போற்றி மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் 1710 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி பிறந்த அழகுமுத்துக்கோன், ஜெக வீரராம எட்டப்பநாயக்கரின் நம்பிக்கைக்குரிய தளபதியாகத் திகழ்ந்தார். ஆங்கிலேயர்கள் வரி வசூலிப்பதைத் தீவிரமாக எதிர்த்துப் போராடிய அவர், "அடிமைப்பட்டு உயிர் வாழ்வதைவிட சுதந்திர மனிதனாய் உயிர்விடுவோம்" என்று கம்பீரமாக முழக்கமிட்டார். 1759 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு, ஏழு வீரர்களுடன் பீரங்கி வாயில் கட்டி சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் 1857 என்று அறியப்பட்டாலும், அதற்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு உயிர்நீத்த அழகுமுத்துக்கோன் போன்ற வீரர்களின் தியாகம், விடுதலைக்கான விதையைத் தமிழக மண்ணில் விதைத்தது. அவரது வீரம், தியாகம் மற்றும் நாட்டுப்பற்றை இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைக்கும் விதமாகவே இதுபோன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.