by Vignesh Perumal on | 2025-07-10 02:47 PM
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் "மொபைலில் கதைகளைப் படித்தால் தினசரி ஆயிரக்கணக்கில் வருமானம்" என ஆசை காட்டி, 300-க்கும் மேற்பட்ட ஏழை எளிய பெண்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த கும்பல், ஒரே இரவில் மொபைல் அப்ளிகேஷன் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்கிவிட்டுத் தலைமறைவாகியுள்ளது. இந்த நூதன மோசடி குறித்துக் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஒரு கும்பல் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டம் செய்வதாகக் கூறி இலவசப் பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளது. இதனால் நம்பி ஏமாந்த பெண்களைக் குறிவைத்து, ஒரு புதிய முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, ₹20,000 பணம் கட்டி ஒரு மொபைல் அப்ளிகேஷனில் வரும் கதைகளைப் படித்தால், ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என பேராசை காட்டியுள்ளனர். மேலும், இந்தச் சங்கிலித் தொடர் மோசடியை (MLM - Multi-Level Marketing) போல விரிவுபடுத்தும் வகையில், ஒரு நபர் சேர்ந்தால் அவருக்குக் கீழ் 15 பேரைச் சேர்க்க வேண்டும் எனவும், அதன் கீழ் மேலும் 15 பேரைச் சேர்க்க வேண்டும் எனவும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனால், கொடைக்கானல் நகர்ப் பகுதிகளில் மட்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏழை எளிய பெண்கள் இந்த மோசடி வலையில் சிக்கியுள்ளனர்.
முதலில் சேர்ந்தவர்களுக்கு, அவர்கள் கட்டிய பணத்திற்கான ஈடுதொகை வங்கியின் மூலம் வந்ததால், பலரும் மேலும் பல நபர்களைச் சேர்த்ததோடு, தாங்களும் கூடுதலாக முதலீடு செய்யத் தொடங்கினர். இந்த அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும் யூ.பி.ஐ. (UPI) மூலம் ஒருங்கிணைத்த அந்த மோசடிக் கும்பல், தாங்கள் எதிர்பார்த்த பெருந்தொகை மொத்தமாகச் சேர்ந்தவுடன், மொபைல் அப்ளிகேஷனையும், வங்கி கணக்குகளையும் ஒரே இரவில் முடக்கிவிட்டுத் தலைமறைவாகி விட்டது.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட பெண்களிடமிருந்து சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அந்த மோசடிக் கும்பல் சுருட்டியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 600-க்கும் மேற்பட்டோர் இந்த மோசடி கும்பலிடம் ஏமாந்ததாகவும் கூறப்படுகிறது.
மோசடிக்கு ஆளானவர்கள் தற்போது விழித்துக் கொண்டு, இழந்த பணத்தை மீட்கும் முயற்சியில் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அப்பாவி ஏழை எளிய மக்களைக் குறிவைத்துச் செயல்பட்டு வரும் இதுபோன்ற மோசடிக் கும்பல்களைக் காவல்துறையும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. சைபர் கிரைம் போலீசார் இந்த மோசடி கும்பலைக் கைது செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.