by Vignesh Perumal on | 2025-07-10 07:58 AM
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று (ஜூலை 9) முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ரஞ்சித்குமார் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தக் கூட்டத்தில், நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் கட்சியின் செயல்பாடுகளை மேம்படுத்துதல், அரசின் சாதனைகளைப் பரப்புரை செய்தல், எதிர்க்கட்சிகளின் தவறான பிரச்சாரங்களுக்குப் பதிலடி கொடுத்தல் போன்ற உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், விரைவில் "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணமாகப் புதுக்கோட்டைக்கு வருகை தரவுள்ள கழகப் பொதுச்செயலாளரும், நாளைய முதலமைச்சருமான எடப்பாடியார் அவர்களுக்கு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் செய்ய வேண்டிய வரவேற்பு ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருச்சி மண்டல செயலாளர் மணிகண்டன், மண்டல இணைச் செயலாளர் சதீஷ் குமார், இலுப்பூர் நகர கழக செயலாளர் சத்யா மணிகண்டன், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய மற்றும் நகர செயலாளர்கள், மற்றும் ஒன்றிய ஐ.டி விங் நிர்வாகிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
எடப்பாடி பழனிசாமியின் வருகைக்கு முன்னதாகவே தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கான பணிகளைத் தீவிரப்படுத்துவது, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை அதிமுக எவ்வளவு தீவிரமாக எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது என்பதைக் காட்டுகிறது.
செய்தி- பழனியப்பன் புதுக்கோட்டை.