by Vignesh Perumal on | 2025-07-10 07:45 AM
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மதுரை - தூத்துக்குடி தேசிய 4 வழிச்சாலையில் இன்று (ஜூலை 10) காலை நிகழ்ந்த கோர விபத்தில், ஒரு கண்டெய்னர் லாரியும், ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு வாகனங்களின் ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை - தூத்துக்குடி தேசிய 4 வழிச்சாலையில், அருப்புக்கோட்டை அருகே, தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்த கண்டெய்னர் லாரி ஒன்று, எதிரே மதுரைப் பகுதியில் இருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற ஈச்சர் வேன் மீது பயங்கரமாக நேருக்கு நேர் மோதியது.
மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் கடுமையாகச் சேதமடைந்தன. வேன் மற்றும் லாரியின் முன்பகுதிகள் உருக்குலைந்தன. இந்த விபத்தில், இரு வாகனங்களை ஓட்டி வந்த ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்துத் தகவலறிந்த அருப்புக்கோட்டை காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்த ஓட்டுநர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீர் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து அருப்புக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிவேகம், ஓட்டுநர்களின் கவனக்குறைவு, அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்தக் கோர விபத்து, அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், பொதுமக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.