by Vignesh Perumal on | 2025-07-09 02:37 PM
மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்து, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே இன்று (ஜூலை 9) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர் சங்கம், சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
நாடு தழுவிய அளவில் இன்று நடைபெற்று வரும் பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல், புதிய தொழிலாளர் சட்டங்கள், விவசாயப் பிரச்சனைகள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
நத்தம் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே திரண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மாதர் சங்கத்தினர் மற்றும் சி.ஐ.டி.யூ. உறுப்பினர்கள், மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பி, சாலை மறியலில் ஈடுபட்டனர். மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத போக்கைக் கைவிட வேண்டும் என்றும், தங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
சாலை மறியல் காரணமாக நத்தம் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் அவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இந்தப் போராட்டங்கள் மூலம் தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல தொழிற்சங்கங்கள் முயற்சித்து வருகின்றன.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.