by Vignesh Perumal on | 2025-07-08 05:35 PM
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஜூலை 9) நாடு தழுவிய அளவில் நடைபெறவுள்ள பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. "வேலை இல்லை, சம்பளம் இல்லை" (NO WORK, NO PAY) என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பது, அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டைப் பாதிக்கும் எனக் கருதும் தமிழக அரசு, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், உதவி தலைமைச் செயலாளர்கள், மற்றும் துறைத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், "அங்கீகரிக்கப்படாத சங்கங்கள், சில கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய முன்வந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் அல்லது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது, அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டைப் பாதிக்கும். எனவே, பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்களுக்கு அந்த ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும். மருத்துவ விடுப்பைத் தவிர, வேறு எந்தச் சாதாரண விடுப்போ அல்லது மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
பகுதிநேர ஊழியர்கள், தினசரி ஊதியம், ஒப்பந்த ஊதியம் பெறுபவர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டால் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்களின் விவரங்களைச் சேகரிக்குமாறும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருதல் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு தழுவிய அளவில் இந்தப் பொதுவேலைநிறுத்தப் போராட்டத்திற்குப் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.