by Vignesh Perumal on | 2025-07-08 11:54 AM
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை நிகழ்ந்த கோர ரயில் விபத்தில், ஆச்சாரியா தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
செம்மங்குப்பம் அருகே உள்ள ஆச்சாரியா தனியார் பள்ளியின் வேன், இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது. அப்பகுதியிலுள்ள ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது, சென்னையில் இருந்து சென்று கொண்டிருந்த ரயில், பள்ளி வேனின் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் பள்ளி வேன் உருக்குலைந்து, சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த கோர விபத்தில், வேனில் பயணம் செய்த 3 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வேன் உருக்குலைந்துள்ளதால், உள்ளே சிக்கியிருப்பவர்கள் குறித்த அச்சமும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற கவலையும் நிலவுகிறது.
விபத்து குறித்துத் தகவலறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஜெயக்குமார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துவதுடன், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
ரயில்வே காவல்துறையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது ஓட்டுநரின் கவனக்குறைவா, அல்லது ரயில்வே கேட்டிலுள்ள பாதுகாப்பு குறைபாடா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் கடலூர் மாவட்டத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.