by Vignesh Perumal on | 2025-07-08 11:23 AM
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் இன்று (ஜூலை 8) காலை பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதி மூன்று மாணவர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்த கோர விபத்து குறித்து திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஆழ்ந்த இரங்கலையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். இந்த விபத்து ரயில்வே துறையின் அஜாக்கிரதையால் ஏற்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற தனியார் பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில், மூன்று பள்ளி மாணவர்கள் மற்றும் கேட் அருகே நின்றிருந்த ஒருவர் என நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் துயரமான நிகழ்வு குறித்துப் பேசிய திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், "கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே துறையின் அஜாக்கரதையால் பள்ளிப் பேருந்தின் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது" என்று தெரிவித்தார்.
ஆளில்லா ரயில்வே கேட்டுகள் அல்லது உரிய பாதுகாப்பு இல்லாத ரயில்வே கேட்டுகளே இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணம் எனப் பல ஆண்டுகளாகவே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விபத்தும், கேட் கீப்பர் உறங்கியதாகக் கூறப்படும் தகவல்களும் ரயில்வே துறையின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துவதாக சச்சிதானந்தம் மறைமுகமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
ரயில்வே துறை இத்தகைய விபத்துகளைத் தடுக்க உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும், குறிப்பாகப் பள்ளிப் பேருந்துகள் கடக்கும் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.