by Vignesh Perumal on | 2025-07-03 09:54 PM
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள மணியக்காரன்பட்டி பூஞ்சோலை பகுதியில் பாஜக நிர்வாகியான பாலன் என்ற ரெண்டக் பாலன் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு சாணார்பட்டி காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சொத்துத் தகராறு காரணமாகவே இந்த கொலை நடந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்ட பாலன், அண்ணன் - தம்பி இடையிலான ஒரு சொத்துத் தகராறில் ஒரு தரப்புக்குச் சாதகமாகச் செயல்பட்டதால், மற்றொரு தரப்பினர் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
புறநகர் துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) சிபிசாய் சௌந்தர்யன் தலைமையிலான போலீசார், கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சடலம் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை விரைந்து கைது செய்து, கொலையின் முழுமையான பின்னணியை வெளிக்கொணர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.