| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

பல லட்சம் மதிப்பிலான அரசு திட்டங்கள் முடக்கம்..! பொதுமக்கள் வேதனை..!

by Vignesh Perumal on | 2025-05-04 09:40 PM

Share:


பல லட்சம் மதிப்பிலான அரசு திட்டங்கள் முடக்கம்..! பொதுமக்கள் வேதனை..!

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இறகு பந்து விளையாட்டரங்கம், உடற்பயிற்சி கூடம், சுகாதார வளாகம் மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்டவை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இறகு பந்து விளையாட்டரங்கம் கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2015 – 2016 ஆம் ஆண்டில் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம் அதே வளாகத்தில் அமைக்கப்பட்டது.

விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடத்திற்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2016-2017 ஆம் ஆண்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் பயன்படுத்தக்கூடிய சுகாதார வளாகம் சுமார் 8 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. ஆனால், இந்த சுகாதார வளாகமும் இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது.

இவையோடு மட்டுமல்லாமல், அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அரசு திட்டங்கள் இருந்தும், அப்பகுதி மக்கள் எவ்வித பலனும் அடைய முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த அலட்சியத்தால், அரசு திட்டங்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டும் பயனற்று கிடப்பில் போடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்க வேண்டிய திட்டங்களை முடக்கி வைத்துள்ள பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment