by Vignesh Perumal on | 2025-04-27 06:31 PM
தேனி மாவட்டத்தில் ஆடுகளைத் தாக்கும் கொடிய நோயான ஆட்டுக்கொல்லி நோயிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்கும் வகையில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இலவச தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் சுமார் 51,000 செம்மறியாடுகளும், 58,000 வெள்ளாடுகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ஆடுகள் ஆட்டுக்கொல்லி (PPR) நோயால் பாதிக்கப்படாமல் இருக்க, தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் வரும் ஏப்ரல் 28, 2025 முதல் மே 27, 2025 வரை 30 நாட்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது.
ஆட்டுக்கொல்லி நோய் என்பது மார்பிலி வைரஸ் வகையைச் சார்ந்த ஒரு கொடிய வைரஸ் தொற்று ஆகும். இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாக அதிக காய்ச்சல், கழிச்சல், இருமல், மூக்கிலிருந்து சளி வடிந்து உறைதல், வாயின் உட்புறம் ஈறு மற்றும் நாக்கில் அதிக உமிழ்நீர் சுரத்தல் மற்றும் தீவனம் உட்கொள்ளாத நிலை ஆகியவை உள்ளன. இந்த நோய் தாக்கப்பட்டால் ஆடுகள் இறக்க நேரிடும். நோயுற்ற ஆடுகளின் உமிழ்நீர், மூக்கிலிருந்து வடியும் நீர், சிறுநீர் மற்றும் சாணம் ஆகியவற்றின் மூலம் இந்த நோய் நேரடியாக மற்ற ஆடுகளுக்கு பரவுகிறது. நோய் தாக்கிய ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தாலும், அவை சினையுறாமலும், போதிய எடை கூடாமலும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்த தடுப்பூசிப் பணியை மேற்கொள்வதற்காக, தேனி மாவட்டத்தில் உள்ள 53 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 3 கால்நடை மருத்துவமனைகளில் 53 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் இருப்பார்கள். இவர்கள் மூலம் நான்கு மாதத்திற்கு மேல் உள்ள சினையற்ற செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளுக்கு வருடம் ஒருமுறை இலவசமாக தடுப்பூசி போடப்படும்.
இந்த தடுப்பூசி முகாம் குறித்து உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் வரும்போது முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆட்டுக்கொல்லி நோயினைத் தடுப்பதற்காக நடைபெறும் இந்த இலவச தடுப்பூசி முகாமினை ஆடு வளர்ப்போர் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!