by Vignesh Perumal on | 2025-04-27 07:17 AM
சென்னையில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த உரிமையாளர் ஹேமா ஜுலியோ (வயது 50) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை முழுவதும் 13க்கும் மேற்பட்ட ஸ்பா சென்டர்களை நடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை அண்ணாநகரில் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஸ்பா சென்டர் ஒன்றில் வெளிமாநிலப் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக அண்ணாநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த ஸ்பா சென்டரை தீவிரமாக கண்காணித்தனர். கண்காணிப்பில் அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது உறுதியானதும், போலீசார் ஸ்பா சென்டருக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
சோதனையின்போது, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட வெளிமாநிலப் பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக சென்னை மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, ஸ்பா சென்டரின் மேலாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், ஸ்பா சென்டரின் உரிமையாளர் ஹேமா ஜுலியோ தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஹேமா ஜுலியோ மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று ஹேமா ஜுலியோவை கைது செய்தனர். விசாரணையில், கைதான ஹேமா ஜுலியோ மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், சென்னை முழுவதும் 13க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்பா சென்டர்களை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த ஸ்பா சென்டர்கள் அனைத்தும் ஸ்பா என்ற பெயரில் இயங்கி வந்தாலும், அங்கு வெளிமாநிலப் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளார். போலீசார் தற்போது ஹேமா ஜுலியோவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த பாலியல் தொழிலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் என்ற போர்வையில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் அவ்வப்போது வெளிச்சத்திற்கு வருவது குறிப்பிடத்தக்கது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!