by Vignesh Perumal on | 2025-04-21 09:39 AM
கர்நாடகாவின் பெங்களூரு நகரில், முன்னாள் டி.ஜி.பி. ஓம் பிரகாஷ் கத்திக்குத்து காயங்களுடன் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எச்.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அவர் உயிரிழந்து கிடந்தார். அவரது வயிறு மற்றும் கழுத்து பகுதிகளில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், ஓம் பிரகாஷின் மனைவி பல்லவி மற்றும் மகளை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், மனைவி பல்லவி தான் குற்றவாளி என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சொத்து தகராறு காரணமாக மனைவிக்கும் ஓம் பிரகாஷுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
சம்பவத்தன்று மதிய உணவின்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், பல்லவி இரண்டு கத்தி களால் ஓம் பிரகாஷை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பின் பல்லவி அமைதியாக நாற்காலியில் அமர்ந்திருந்ததாகவும், அவர்தான் போலீசுக்கு தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. வீட்டில் இருந்த மகள் இந்த சம்பவத்தில் சம்பந்தப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஓம் பிரகாஷின் மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் டி.ஜி.பி. ஓம் பிரகாஷ் கத்திக்குத்து காயங்களுடன் மரணமடைந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.