by Vignesh Perumal on | 2025-04-21 09:09 AM
அருள்மிகு திருமண தடை நீங்கும் தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோயில்
விழுது விடாத அதிசய ஆலமரத்தின் அடியில் இருந்து அருள்பாலிக்கும் அற்புத விநாயகர் பொய்யாமொழி பிள்ளையார். இவரை நெல் குத்தித் தந்த விநாயகர் என்றும் சொல்கிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்குள்ள சிறுவர்கள் கண்டெடுத்து, நெல்குத்திப் பயன்படுத்திய இந்த லிங்க விநாயகத் திருமேனியே பிறகு பிரதிஷ்டை செய்யப்பட்டு பொய்யாமொழி பிள்ளையார் என்றும் வணங்கப்படுகிறார்.
மிளகை உளுந்தாக்கிய விளையாடல்...
முருகப்பன் என்னும் வணிகர் 100 பொதி மாடுகளின் மீது மிளகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கோயிலின் வழியே சந்தைக்குச் சென்றார். அப்போது இந்த கோயில்காரர்கள் விநாயகருக்குப் பொங்கல் நிவேதனம் செய்வதற்காக அவரிடம் கொஞ்சம் மிளகு கேட்டனர். அதற்கு வணிகர், ‘‘மூட்டையில் உள்ளது அத்தனையும் உளுந்து! என்னிடம் மிளகு இல்லையே’’ என்று பொய் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவர் சொன்னபடியே மூட்டைகளை அவிழ்த்துப் பார்த்தால் மிளகுக்கு பதில் உளுந்துதான் இருந்தது. வணிகர் கதறி அழுது விநாயகரிடம் மன்னிப்பு கேட்டதும் மீண்டும் மிளகாகி விற்பனையானது. அந்தப் பணத்தில் வணிகர் ஆலமரத்தடி விநாயகருக்குக் கோயில் எழுப்பி, பொய்யாமொழி விநாயகர் என்ற பதிகமும் பாடினார் என்கிறது தலவரலாறு.