by Vignesh Perumal on | 2025-04-20 07:22 PM
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தனியார் பேருந்தும் மினிவேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், ஆண்டிபட்டி மின்வாரிய அலுவலகம் அருகே இன்று (ஏப்ரல் 20, 2025) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மதுரையில் இருந்து போடி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றும், தேனியில் இருந்து ஆண்டிபட்டிக்கு சிமெண்ட் லோடு ஏற்றி வந்த சரக்கு மினிவேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் மினிவேனின் ஓட்டுநர், ஆண்டிபட்டி சீனிவாசா நகரைச் சேர்ந்த 45 வயதான முத்துலிங்கம் படுகாயமடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
மேலும், தனியார் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாலையின் மையத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால், தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த ஆண்டிபட்டி போலீசார் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பின்னர், சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.