by Vignesh Perumal on | 2025-04-19 09:38 AM
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடை எண் ஒன்றில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பையில் சுமார் 12 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 6 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் நேற்று (ஏப்ரல் 18) இரவு எழும்பூர் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் நடந்துள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பையை கண்டனர்.
அந்த பையை திறந்து பார்த்தபோது, உள்ளே கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக ஆர்.பி.எப் போலீசார், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், பையில் இருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா யாருடையது, எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், பயணிகளிடம் விசாரித்தும் குற்றவாளிகளை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில் நிலையங்களில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.