by Vignesh Perumal on | 2025-04-18 11:29 AM
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு (NEET PG 2025) நேற்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய மருத்துவக் கல்வி தேர்வு வாரியம் (NBEMS) அறிவித்துள்ளது. எம்எஸ், எம்டி, பிஜி டிப்ளமோ போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வாக இது நடத்தப்படுகிறது.
தேசிய மருத்துவக் கல்வி தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2025ஆம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வுக்கு ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப செயல்முறை NBEMS-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (natboard.edu.in) நடைபெறுகிறது.
முக்கிய தேதிகள்: ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: ஏப்ரல் 17, 2025
தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 15, 2025
முதுநிலை நீட் தேர்வு தேசிய அளவில் ஒரே தகுதி மற்றும் நுழைவுத் தேர்வாக நடத்தப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை பெற முடியும். தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு முறை, தகுதி வரம்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் NBEMS தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரிவாக வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் அனைத்து தகவல்களையும் கவனமாகப் படித்து தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விருப்பமுள்ள மற்றும் தகுதியான மாணவர்கள் NBEMS-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தலாம். கடைசி தேதி நெருங்குவதற்குள் விண்ணப்பிப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இந்த நீட் தேர்வு மிகவும் முக்கியமானதாகும். இதன் மூலம் கிடைக்கும் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். எனவே, இந்த தேர்வுக்கு மாணவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
தேசிய மருத்துவக் கல்வி தேர்வு வாரியம், தேர்வுக்கான ஹால் சம டிக்கெட் வெளியீடு மற்றும் தேர்வு முடிவுகள் வெளியீடு போன்ற பிற தகவல்களையும் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் அவ்வப்போது NBEMS இணையதளத்தை தொடர்ந்து கண்காணித்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.