by Vignesh Perumal on | 2025-04-17 04:43 PM
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் நடைபெறும் திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பக்தர்களின் நலன் கருதி, முக்கிய திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாத பௌர்ணமி மற்றும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசம் போன்ற நாட்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மேலும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருநாளிலும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த பக்தர்கள் இந்த அறிவிப்பால் பெரிதும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் சேகர்பாபுவின் இந்த அறிவிப்பு, கோவில்களில் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் அரசின் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் - மாத பௌர்ணமி, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் - தைப்பூசம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோயில் - வைகுண்ட ஏகாதசி. இந்த அறிவிப்பின் மூலம், லட்சக்கணக்கான பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.